அத்தியாயம் -38

ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் சரித்திரத்தை சித்த முனிவர் கூறிக் கொண்டே இருக்கையில் தரையில் அமர்ந்தபடி அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் ‘ஸ்வாமி, உண்மையைக் கூறினால் ஆனந்தத்தின் எல்லை எந்த அளவு என் மனதில்  வியாபித்து உள்ளது என்பதைக் கூற முடியாத நிலையில்  இருக்கிறேன். நான் உங்களை சந்தித்தது என்னுடைய பூர்வ ஜென்ம புண்ணியம்தான் என்றே கூற வேண்டும். இல்லை என்றால் இத்தனை மகிமையான கதைகளை யார் மூலம் கேட்டு இருப்பேன்? ஆகவே ஸ்வாமி  தயவு செய்து ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மகிமைகள் இன்னும் எத்தனை கூற முடியுமோ அத்தனையையும் கூறினால் அளவற்ற மகிழ்ச்சி அடைவேன்’ என்றார். அதனால் ஆனந்தம் அடைந்த சித்த முனிவரும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி  ஸ்வாமிகளின் சரித்திரத்தை  தொடர்ந்து கூறலானார்.

‘கங்காபுரம் என்ற ஊரில் பாஸ்கரன் என்ற பெயரைக் கொண்ட ஒரு ஏழை பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் கருநெல்லி மரத்தடியில் அமர்ந்து இருக்கும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் சென்று அவரை நமஸ்கரித்து விட்டு வருவார். அதை அவர் தனது தினசரி வாழ்க்கை முறையாகவே  வைத்துக் கொண்டு இருந்தார்.  ஒரு நாள் அந்த ஊரில் ஒரு பண்டிகை நடந்தது. அப்போது ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு உணவு சமைத்து பிட்ஷை தர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் ஏழ்மை நிலையில் இருந்த அவரிடம் இருந்ததோ மிகக் குறைவான அளவிலான உணவுப் பண்டம் மட்டுமே. அதைக் கொண்டு அவரால் ஐந்து பேருக்குக் கூட உணவு போட முடியாது.  ஆகவே ஸ்வாமிகளுக்கு உணவு எனும் பெயரில் பிட்ஷை தரும் நேரத்தில் இன்னும் சிலர் வந்து விட்டால் என்ன செய்வது?

செல்வந்தர்கள் ஆங்காங்கே பிட்ஷை தந்தவண்ணம் இருந்தார்கள். அங்கெல்லாம் திரளான அளவில் மக்கள் சென்று உணவைப் பெற்றுக் கொண்டார்கள். சில பிராமணர்களிடம் பாஸ்கர்  தனக்கும் பிட்ஷைப் போட ஆசையாக உள்ளது என்று தனது ஆசையைக் கூறியபோது அவர்கள் அவரை கேலி செய்தார்கள்.  ‘நீயே பிட்ஷை எடுத்து சாப்பிடும் நிலையில் இருக்கிறாய். உனக்கு பிட்ஷை போட வேண்டும் என்ற ஆசை வேறா. முதலில் உன் வயிற்றுப்  பிழைப்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் ?’ என்று கேலி செய்தார்கள்.

அதைக் கேட்ட பாஸ்கருக்கு அவமானமாக இருந்தது. செல்வந்தர்கள் போட்ட பிட்ஷையில் கூடிய கூடத்தைப் பார்த்தவர் தன்னால் நாலுபேருக்குக்  கூட போட பிட்ஷைப் முடியாதே என மனம் வருந்தினார்.  தனது பிராமண நண்பர்களை அது குறித்துக் கேட்டோமே என மனதுக்கு இன்னும் அவமானமாக இருந்தது.

இப்படியாக சில நாட்கள் கழிந்தன. ஒருநாள் அவரை வணங்க வந்த ஒரு செல்வந்தர் தான் மறுநாள் ஸ்வாமிகளுக்கும் மற்றவர்களுக்கும் பிட்ஷை தர விரும்புவதாகக் கூறி அதற்கு அவரிடம் அனுமதி கேட்டார். ஆனால் அப்போது அங்கு நின்றிருந்த பாஸ்காரின் எதிரில் ஸ்வாமிகள் கூறினார்  ‘நாளைக்கு இங்கு நிறைய மக்கள் வருவார்கள் என்பதினால் எங்களுக்கு பாஸ்கர்  பிட்ஷை போடட்டும்’.  அதைக் கேட்ட ஏழை பிராமணர் பாஸ்கருக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. அப்படியே அதிர்ந்து போனார். தன்னிடம் உள்ள பொருளைக் கொண்டு உணவு செய்து  அதை நாலு பேருக்குக் கூட பிட்ஷையாக  தர இயலாது. ஆனால் ஸ்வாமிகளோ ஒரு கூட்டத்துக்கே பிட்ஷை போடுவார் என்கிறாரே என்ன செய்வது எனப் புரியாமல் குழம்பி நின்றபோது அந்த செல்வந்தரும் அவரைப் பார்த்தார். அவரைப் பார்த்த பார்வையிலேயே, ‘இந்த மனிதனே பவதி பிட்ஷாந்தேகி என்கிறபோது  இவர் எங்கிருந்து பிட்ஷைப் போடுவார் என்று ஸ்வாமிகள் கூறுகிறார்’ என கேலியாக பார்த்த பார்வை பாஸ்கரை மேலும் அவமானப்படுத்தியது போல இருந்தது.

ஆனாலும் வேறு வழி இல்லை. ஸ்வாமிகளிடம் ஒன்றும் கூற முடியாது. ஏன் என்றால் அப்படிக் கூறிய பின் ஸ்வாமிகள் கண்களை மூடிக் கொண்டு தவத்தில் ஆழ்ந்து விட்டார். வீடு திரும்பிய ஏழை பிராமணர்  மனைவியிடம் நடந்ததைக் கூற அவளும் வருத்தம் அடைந்தாள். சரி வருவது வரட்டும். நம்மிடம் உள்ளதை கொண்டு போய்  முதல் பிட்ஷையை ஸ்வாமிகளுக்கு போடலாம். அடுத்து எத்தனைபேருக்கு தர முடியுமோ தந்து விட்டு அமைதியாக தலையைக் குனிந்து  கொண்டு நிற்கலாம். அனைவர் முன்னாலும் நாம் அவமானப்பட வேண்டும் என ஸ்வாமிகள் நினைத்தால் அதை நம்மால் தடுக்கவா முடியும் என எண்ணியபடி  இரவு உறங்கி விட்டார்கள்.

மறுநாள் காலை எழுந்து காலைக் கடன்களைக் கழித்தப் பின் குளித்து விட்டு இருந்த பொருட்களைக் கொண்டு சமையல் செய்தார்கள்.  நான்கு  அல்லது மிஞ்சிப் போனால் ஐந்து  பேருக்குக் கூட நிறைவாக இருக்காத அளவு மட்டுமே உணவு இருந்தது. ஒரு யந்திரம் போல அதை எடுத்துக் கொண்டு ஸ்வாமிகளுக்கு முன்னால்  கொண்டு போய் வைத்து  அதை நைவித்தியம் செய்தார்கள். அங்கோ ஆயிரக்கணக்கில் பிட்ஷைக்கு சாப்பிட வந்திருந்த கூட்டம் அமர்ந்தபடி உணவை எதிர்பார்த்துக் காத்திருந்தது. ‘கையில் நான்கு இலைகளுடன் சின்ன பாத்திரத்தில் ஏழை பிராமணன் கொண்டு வந்த உணவு யாருக்கு கிடைக்கப் போகிறது. போச்சடா, இன்று நாம் பட்டினிதான்’ என்று எண்ணிக்கொண்டு அங்கு கூடி இருந்த கூட்டம் அங்கலாய்த்தது. ஆனால் ஸ்வாமிகள் எதிரில் வந்து நின்று கொண்டு விட்டதினால் அவர் கூறும்வரை அங்கிருந்து எழுந்து போக முடியாது என்பதினால் அமைதியாக அமர்ந்து இருந்தார்கள்.

முதல் பிட்ஷையை ஸ்வாமிகளுக்கு  ஏழை பிராமணர் பாஸ்கரின் மனைவி தந்தப் பின் அதை ஏற்றுக் கொண்ட ஸ்வாமிகள் இனி வரிசையில் அமர்ந்து உள்ளவர்களுக்கு இலையைப் போட்டு உணவை பரிமாறு என்று ஆணையிட்டார். ‘கையில் உள்ள பாத்திரத்தில் நான்கு கரண்டி உணவும், நான்கு இலைகளுமே கையில் இருக்க இந்த உணவை போட்டால் இரண்டாவது மனிதருக்கே அது போதாமல் இருக்கும்போது ஸ்வாமிகள் இப்படி நம்மை அவமானப்பட வைக்கிறாரே’  என அந்த பிராமண தம்பதியினர் மனதில் வருந்திக் கொண்டு பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு இலையை போடத் துவங்கினார்கள். இலையைப் போடப் போட அவள் கையில் இருந்த இலையும் வந்து கொண்டே இருக்க, அவளைத் தொடர்ந்து பாஸ்கரும் பாத்திரத்தில் இருந்த உணவை முதலில் அமர்ந்திருந்தவருக்கு இலை  நிறைய  போட்டதும், அந்த பாத்திரத்தில் இன்னும் உணவு இருக்க அடுத்தவருக்கு, அடுத்தவருக்கு என உணவைப் பரிமாற்ற பரிமாறிக் கொண்டே போய்க்கொண்டு இருக்க உணவு பாத்திரத்தில் இருந்து  உணவு வற்றாமல் வந்து கொண்டே இருந்தது. அந்த தம்பதியினருக்கு மட்டும் அல்ல உணவைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் ஒரே ஆச்சர்யம். அந்த தம்பதியினர் கொண்டு வந்த உணவு நாங்கு பேர்களுக்குக் கூட போதாது என்று எண்ணியபோது, போதும், போதுமென்ற அளவில் இன்னும், இன்னும்  என்று கேட்டு  வயிறு முட்ட உண்டவர்கள் மட்டும் அல்ல பாஸ்கர் தம்பதியினரே பேச்சு மூச்சு இல்லாமல் அதிர்ச்சியில் இருந்து அதில் இருந்து மீளவும் முடியாமல் பிட்ஷையைப் போட்டவண்ணம் இருந்தார்கள்.

பிட்ஷைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் வந்தார்கள். வயிறு முட்ட முட்ட அனைவரும் உணவை உண்டார்கள். அந்த அளவு உணவு எங்கிருந்து தன்னுடைய பாத்திரங்களில் நிறம்பி வழிந்து கொண்டே இருந்தது என அந்த தம்பதியினருக்கும் தெரியவில்லை, வந்திருந்த மக்களுக்கும் புரியவில்லை. பாஸ்கர் தம்பதியினர் ஸ்வாமிகள் முன் நின்று ‘ஸ்வாமி இதென்ன மாயை என்று எங்களுக்கு விளங்கவில்லை. உங்களுடைய கருணைக்கு நாங்கள் எப்படி கைம்மாறு செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. நாங்களோ ஏழை பிராமணர்கள்’ என்று கூற அவர்களை தேற்றினார் ஸ்வாமிகள். ‘பிராமணத் தம்பதியினரே, இனி என் முன் நீங்கள் அமர்ந்து உணவு அருந்திய பின், மீதம் உள்ள உணவை அதோ தெரிகிறதே பீமா நதி, அதில் சென்று போட்டு விடுங்கள்’ என்று கூற ஸ்வாமிகள் கூறியபடியே அவர்கள் செய்தார்கள். அன்று அங்கு குறைந்தது நான்காயிரம் அல்லது ஐயாயிரம் மக்கள் உணவு உண்டிருப்பார்கள். அந்த ஊரில் இருந்த அனைவரும் ஸ்வாமியின் மகிமையை பேசிப் பேசி மகிழ்ந்தார்கள். அதன் பின் பாஸ்கர் தம்பதியினருக்கு வாழ்கை சீராக சென்று கொண்டு இருக்க, ஒருநாள் கூட உணவு  பஞ்சம் இன்றி நல் வாழ்வை வாழ்ந்து வரும் அளவில் வாழ்கை அமைந்து இருந்தது” (இப்படியாக அத்தியாயம்-38 முடிவடைந்தது)

…………..தொடரும்